கரோனா வைரஸ் பரவல் தொடர்பாகச் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என 102 நாடுகள் உலக சுகாதார அமைப்பிடம் வலியுறுத்திய நிலையில், இந்த கோரிக்கைக்கு ஒப்புதல் அளித்துள்ளது அந்த அமைப்பு.
சீனாவின் வுஹான் நகரில் தொடங்கி இன்று லட்சக்கணக்கான மக்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது கரோனா வைரஸ். இந்நிலையில் இந்த வைரஸ் பரவலில் சீனாவுக்கு ஆதரவாக உலக சுகாதார அமைப்பு செயல்படுவதாகக் குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, அந்த அமைப்புக்கு வழங்கிவந்த நிதியுதவியும் நிறுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் சீனாவைக் குற்றம்சாட்டி வரும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் என மொத்தம் 62 நாடுகள் ஒன்றிணைந்து, இந்த விவகாரத்தில் சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என நேற்று நடைபெற்ற உலக சுகாதார அமைப்பின் 73- ஆவது ஆண்டு பொதுக்குழுக்கூட்டத்தில் கோரிக்கையை முன்வைத்தன.
இந்த கோரிக்கைக்கு இந்தியா உட்பட 102 நாடுகள் ஆதரவளித்த நிலையில், இதனை ஏற்றுக்கொண்டுள்ளது உலக சுகாதார அமைப்பு. கரோனா வைரஸ் எவ்வாறு உருவானது, விலங்குகள் மூலம் மனிதர்களுக்கு எவ்வாறு பரவியது, அதைத் தடுக்க உலக சுகாதார அமைப்பு என்னென்ன நடவடிக்கைகள் எடுத்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. இதுகுறித்து பேசிய உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானன், "உலக நாடுகளின் கோரிக்கையின்படி மிகவும் விரைவாக, உரிய நேரத்தில் முழுமையான விசாரணை வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்பதை உறுதி செய்கிறேன். அதுவரை எந்தநாடும் உலக சுகாதார அமைப்புக்கு வழங்கும் நிதியை நிறுத்த வேண்டாம். கரோனா வைரஸ் மீண்டும் வராமல் பார்த்துக்கொள்ளத் தேவையான நடவடிக்கைகளை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும்" எனத் தெரிவித்தார்.