உலகம் முழுவதும் ஏப்ரல் ஒன்றாம் தேதி, முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினத்தில் ஒருவரை ஒருவர் எதாவது ஒரு வகையில் ஏமாற்ற முயற்சிப்பதும், அதில் வெற்றி காண்பதும் வழக்கம். அந்தவகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமாகிய ஜில் பைடன், பத்திரிகையாளர்களை ஏமாற்றி முட்டாள்கள் தினத்தைக் கொண்டாடியுள்ளார்.
ஏப்ரல் ஒன்றாம் தேதி, வாஷிங்டனுக்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அந்த விமானத்தில் பத்திரிகையாளர்களும் பயணம் செய்தனர். அப்போது ஜில் பைடன் விமானப் பணியாளர் வேடமணிந்து, விக் வைத்து முகக்கவசம் அணிந்து பத்திரிகையாளர்களுக்கு ஐஸ் க்ரீம்களை வழங்கியுள்ளார்.
பத்திரிகையாளர்கள் சாப்பிடத் தொடங்கியதும், அங்கிருந்து நகர்ந்து ஜில் பைடன், விக்கை கழட்டிவிட்டு மீண்டும் வந்துள்ளார். அப்போதுதான் பத்திரிகையாளர்கள், தங்களுக்கு ஐஸ்க்ரீம் வழங்கியது அமெரிக்காவின் முதல் பெண்மணி என உணர்ந்து அதிர்ச்சியடைந்தனர். இதன்பிறகு பத்திரிகையாளர்களுக்கு ஜில் பைடன் முட்டாள்கள் தின வாழ்த்துகளை தெரிவித்தார்.