இந்தியாவில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தீவிரமாக பரவி வரும் கரோனா இரண்டாவது அலையைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நாட்டில் சுகாதார அவசரநிலை ஏற்பட்டுள்ளதாக காங்கிரஸ் கூறி வருகிறது. இந்தக் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்துவது அவசியமான ஒன்றாக கருதப்படுகிறது.
இருப்பினும், தடுப்பூசி தயாரிப்புக்குத் தேவையான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மூலப்பொருட்கள் போதிய அளவில் கிடைக்காததால், இந்தியாவில் மட்டுமின்றி பல நாடுகளிலும் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக சில நாட்களுக்கு முன் சீரம் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஆதார் பூனவல்லா, மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு அமெரிக்க அதிபருக்கு வேண்டுகோள் விடுத்தார்.
மேலும், இந்திய அரசு தரப்பிலும் இதுகுறித்து அமெரிக்காவுடன் விவாதிக்கப்பட்டது. ஆனாலும் தடுப்பூசி செலுத்துவதில் அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை என இந்தியாவின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி கோரிக்கையை அமெரிக்கா ஏற்க மறுத்தது. இதனால் தடுப்பூசி மூலப்பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தநிலையில், நேற்று (25.04.2021) இந்தியா மற்றும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இதுதொடர்பாக விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து இந்தியாவிற்கு தடுப்பூசிக்கான மூலப்பொருட்களை தர அமெரிக்கா முன்வந்துள்ளது. இதுதொடர்பாக அமெரிக்கா, மூலப்பொருட்களுக்கான ஆதாரங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவை உடனடியாக இந்தியாவிற்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மருந்துகள், வென்டிலேட்டர்கள், கவச உடைகள், பரிசோதனை கருவிகள் ஆகியவை அவசரகால தேவையின் அடிப்படையில் இந்தியாவிற்கு வழங்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கரோனா தடுப்பூசி மூலப்பொருட்களைத் தருவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது கரோனாவிற்கெதிரான இந்தியாவின் போரில், இந்தியாவிற்கு பக்கபலமாக அமையும் என கருதப்படுகிறது.