அமெரிக்கா முழுவதும் ஜார்ஜ் ஃபிளாய்ட் மரணத்திற்கு எதிராகப் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், புனித ஜான் சர்ச்சின் முன்னால் பைபிளுடன் போட்டோவுக்குப் போஸ் கொடுப்பதற்காக அங்கு அமைதியாகப் போராடிய மக்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசொட்டாவில் கள்ளநோட்டுப் புழக்கம் தொடர்பான விசாரணை ஒன்றின் போது ஜார்ஜ் ஃபிளாய்ட் என்ற கருப்பின இளைஞர் ஒருவர் காவலரால் கொல்லப்பட்டார். இதனையடுத்து கருப்பின மக்களுக்கு எதிரான ஓடுக்குமுறைகளை முடிவுக்கு கொண்டுவர வலியுறுத்தி அந்நாட்டில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், புனித ஜான் சர்ச்சின் முன்னால் அமைதியான முறையில் போராடிய மக்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பலவந்தமாக அப்புறப்படுத்தினார். பின்னர் அந்த சர்ச்சின் முன் பைபிளுடன் நின்று அமைதியை வலியுறுத்தி புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
இந்நிலையில், ட்ரம்ப்பின் இந்தச் செயல் குறித்து கடுமையாக விமர்சித்துள்ள, பெயர் வெளியிட விரும்பாத வெள்ளைமாளிகை அதிகாரி ஒருவர், "நான் என்றுமே இவ்வளவு அவமானமாக உணர்ந்ததேயில்லை. நேர்மையாகச் சொல்லப்போனால் நான் மிகவும் அருவருப்படைந்தேன், வெறுப்படைந்தேன். வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது. ஆனால் அவர்கள் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தாங்களே தங்களைப்பற்றி பெருமைப்பட்டுக் கொள்கின்றனர்" என தெரிவித்துள்ளார். அவரின் இந்தப் பேச்சு தற்போது அதிகளவில் பகிரப்பட்டு, மக்கள் மத்தியில் ஆதரவைப் பெற்று வருகிறது. ஏற்கனவே, காவல்துறை அதிகாரி ஒருவர், "ட்ரம்ப்பிடம் சொல்வதற்கு ஆக்கபூர்வமாக எதுவும் இல்லையென்றால் அவர் தனது வாயை மூடிக்கொண்டு இருக்கலாம்" எனப் பேசியிருந்தது வைரலானது குறிப்பிடத்தக்கது.