ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது. தொடர்ந்து, ஏழாவது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறி வருகிறது. ரஷ்யாவின் இந்தச் செயலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. எஸ்டோனியா, லாட்வியா, போலந்து, செக் குடியரசு, பல்கேரியா, பின்லாந்து, அமெரிக்கா ஆகிய நாடுகள் ரஷ்ய விமானங்கள் தங்கள் நாட்டின் வான் பரப்பில் பறக்க தடை விதித்து, உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.
இந்த நிலையில். கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற போரில் ரஷ்ய ராணுவ வீரர்கள் 6000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போரில் 4,300 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ளதாக கடந்த திங்கட்கிழமை ஜெலன்ஸ்கி தெரிவித்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்திருக்கும் இந்தப் பலி எண்ணிக்கையானது பலருக்கும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. முழு பலத்துடன் களத்தில் நிற்கும் ரஷ்யா தரப்பிலேயே 6000 வீரர்கள் வரை உயிரிழந்துள்ளது உக்ரைனில் நடைபெற்றுவரும் போரின் தீவிரத்தை உலக நாடுகளுக்கு உணர்த்தியுள்ளது.
பலியான ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை வெளிப்படுத்தாமல் தங்கள் நாட்டு ராணுவ வீரர்களும் இந்தப் போரில் உயிரிழந்துள்ளனர் என்பதை சமீபத்தில் ரஷ்யா ஒப்புக்கொண்டது குறிப்பிடத்தக்கது.