உலகின் நம்பர் ஒன் பணக்காரரும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான எலான் மஸ்க், உலகின் முன்னணி சமூக வலைத்தளமான ட்விட்டரை தன் வசப்படுத்திக் கொண்டார். நிறுவனத்தை வாங்கியதும் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்த பராக் அகர்வாலைப் பொறுப்பிலிருந்து நீக்கினார். அத்துடன் அந்நிறுவனத்தின் சட்டத் துறைத் தலைவர் விஜயா கட்டே, பொது ஆலோசகர் சீன் எட்கல், தலைமை நிதி அதிகாரி நெட் சேகல் ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கி பல அதிரடி முடிவுகளை எலான் மஸ்க் எடுத்து வருகிறார்.
இதற்கு அடுத்தபடியாக மற்றொரு அறிவிப்பு வந்தது. ட்விட்டரில் ப்ளூ டிக் வசதி கொண்ட அதிகாரப்பூர்வ கணக்கு வைத்திருப்பவர்களிடம் மாதா மாதம் கட்டணம் வசூலிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் ட்விட்டரில் வேலை பார்க்கும் ஊழியர்களின் எண்ணிக்கையைப் பாதியாகக் குறைக்க இருப்பதாக செய்திகள் வெளியானது. இதனால் 50 % ஊழியர்கள் வேலை இழக்கும் சூழல் உருவானது.
தற்போது அது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ட்விட்டரில் வேலை பார்க்கும் பணியாளர்களில் ஏராளமானோர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஊழியர்களுக்கு நிர்வாகம் அனுப்பிய கடிதத்தில் இன்றில் இருந்தே பணியில் இருந்து விலக உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியானது.
அதிகாலை 4 மணியளவில் அனுப்பப்பட்ட இந்த மின்னஞ்சலில் ஒரு பணியாளராக அலுவலகத்தை அணுகும் இமெயில் போன்ற வசதிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்நிலையில் முன்னறிவிப்பு இன்றி நடைமுறைப் படுத்தப்பட்ட இந்த நடவடிக்கைக்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள எலான் மஸ்க் “நிறுவனத்திற்கு ஒவ்வொரு நாளும் 4 மில்லியன் இழப்பு ஏற்படுகிறது. ஆட்குறைப்பு செய்வதைத் தவிர வேறு வழியில்லை. அவர்களுக்கு மூன்று மாத பணி நீக்க ஊதியம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சட்டப்படி வழங்கப்படுவதை விட 50% அதிகமானது” எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில் ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட இந்தியாவைச் சேர்ந்த யாஷ் அகர்வால் என்ற நபர் “ட்விட்டரில் இருந்து இப்போதுதான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். ட்விட்டரில் பணியாற்றியது பெருமைக்குரியது. இந்த அணியில் இந்த சூழ்நிலையில் ஓர் அங்கமாக இருந்தது மிகப் பெரிய பாக்கியம்” என்று தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 180 ஊழியர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.