உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.
மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளுக்கு அஞ்சாமல், ரஷ்யா உக்ரைன் மீதான ராணுவப் படையின் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது. தலைநகர் கீவ், மரியுபோல், லிவிவ் ஆகிய நகரங்களில் குண்டுமழை பொழிந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, மேற்குப் பகுதியில் போலந்து நாட்டின் எல்லைக்கு மிக அருகே ரஷ்யா ஏவுகணைத் தாக்குதலை நடத்தியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள படைத் தளத்தில் மேற்கத்திய நாடுகளின் வீரர்கள் இரண்டு மாதங்களுக்கு முன்பாக, உக்ரைன் படைகளுக்கு பயிற்சி அளித்து வந்தனர். இந்த படைத் தளத்தின் மீது அதிகாலை வேளையில் ரஷ்யா ஏவுகணைகளை வீசியுள்ளது. இதில் 9 பேர் உயிரிழந்தனர். 57 பேர் காயமடைந்தனர்.
போலந்து நேட்டோ நாடு என்பதால், அதன் எல்லை அருகே ரஷ்யா தாக்குதலை நடத்தியிருப்பது பூதாகரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கிடையே, கீவ் மற்றும் மரியுபோல் ஆகிய நகரங்களில் ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்கிறது. மரியுபோலில் மின்சாரம், உணவு, குடிநீரின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தவித்து வருகின்றனர். கடுமையான குளிரும் அவர்களை வாட்டி வதைக்கிறது. இந்த மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் சென்ற வாகனம் மீது ரஷ்யா தாக்குதலை நடத்தியதாக உக்ரைன் அரசு குற்றம்சாட்டியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலில் இதுவரை 1,300 வீரர்கள் உயிரிழந்திருப்பதாக உக்ரைன் அரசு கூறியுள்ளது. அதேபோல், உக்ரைனில் 3,587 நிலைகளை அளித்திருப்பதாக ரஷ்யா தரப்பு கூறியுள்ளது. போர் காரணமாக உக்ரைனில் இருந்து சுமார் 25 லட்சம் மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர். போரின் தீவிரம் அதிகரித்திருப்பது குறித்து விவாதிக்க, இந்த வாரம் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது.