குடியுரிமை திருத்த சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை என்பதால் அதுகுறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை என்று அந்நாட்டு துணைத் தூதர் ரோமன் பாபுஸ்கின் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து மத பாகுபாட்டல் இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்கிறார். இந்த சட்டத்திற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நாடு முழுவதும் இதற்கு எதிராக மாணவர்களின் போராட்டம் வலுப்பெற்று வருகிறது.
இந்நிலையில், செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ரஷ்ய துணைத் தூதர் ரோமன் பாபுஸ்கினிடம் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு "குடியுரிமை திருத்தச் சட்டம் இந்தியாவின் உள்நாட்டுப் பிரச்னை. இதுகுறித்து ரஷ்யா கருத்து தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. பிரச்னைகள் இருந்தால் அவை பேசித் தீர்க்கப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.