நேற்று அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் ஈரான் படைத் தளபதி சுலைமானின் இறுதி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இன்று மதியம் இந்த இறுதி ஊர்வலம் நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அலங்கரிக்கப்பட்ட கார் ஒன்றில் சுலைமானின் உடல் வைக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த ஊர்வலத்தில் பெண்கள், காவல்துறையினர் உட்பட ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
