அமெரிக்கா, சீனா, ரஷ்யா போன்ற நாடுகள் தங்களது பாதுகாப்பை உறுதி செய்வதற்கான ஆராய்ச்சிகளில் அதிக அளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றன. புதிய மற்றும் நவீன ஆயுதங்கள் தொடர்பான ஆராய்ச்சிகளில் இந்த மூன்று நாடுகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், உலகின் அதிவேகமான சூப்பர்சோனிக் ஏவுகணையை ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் ஹைப்பர்சோனிக் திட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், சீனா ஒரு ஹைப்பர்சோனிக் விமானத்தை கடந்த ஆண்டு பரிசோதித்ததாகக் கூறியது. ஆனால் அதன் செயல்பாடுகள் குறித்து அறிவிப்புகள் வெளியாகவில்லை. அமெரிக்கா இந்த ஏவுகணையை உருவாக்க தற்போதுதான் ஒப்பந்தங்கள் மேற்கொண்டு வருகின்றன. இந்த நிலையில் ரஷ்யா சூப்பர்சோனிக் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதித்துள்ளதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய புதின், "அவங்கார்டு ஹைப்பர்சோனிக் ஏவுகணையானது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பாயும். அதுமட்டுமின்றி, இலக்கை நெருங்க நெருங்க ஆயுதத்தின் போக்கு மற்றும் அதன் உயரத்தை கட்டுப்படுத்த முடியும். இவ்வளவு வேகத்தில் செல்லும் இந்த ஏவுகணையை உலகின் எந்த நாட்டு ராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது. வானில் இருந்து வெளியேறிய எரிகல் போன்று இது இலக்கை தாக்கி அழிக்கும் சக்தி உடையது. மணிக்கு சுமார் 7,000 மைல்கள் வேகத்தில் இது செல்லும்" என தெரிவித்துள்ளார்.