ஹோலி பண்டிகையன்று பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இரண்டு இந்து சிறுமிகள் கடத்தப்பட்டு இஸ்லாமுக்கு கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டதாக பாகிஸ்தான் ஊடகங்களில் செய்தி வெளியானது.
ஹோலி பண்டிகை தினத்தன்று மாலை நேரத்தில் பாகிஸ்தானில் ரவீனா (13) ரீணா (15) ஆகிய இரு பெண்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களை கடத்தி மதமாற்றம் செய்து இஸ்லாமிய மதகுரு நிக்காஹ் எனப்படும் திருமணச்சடங்கை நடத்தும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இன்னொரு வீடியோவில் கடத்தப்பட்ட இரு பெண்களும் தாங்கள் சொந்த விருப்பத்தின்பேரில் தான் இஸ்லாமுக்கு மதம் மாறுவதாக தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் தலையிட்டு இந்த விவகாரம் தொடர்பாக வரும் ஊடகச் செய்திகளை பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதருக்கு இணைத்து இதுகுறித்து உடனடியாக அறிக்கை ஒன்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த பாகிஸ்தான் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஃபாவத் சவுத்ரி, ''இது எங்கள் உள்நாட்டுப் பிரச்சினை'' என கருத்து கூறினார்.
இதற்கு மீண்டும் பதிலளித்த சுஷ்மா ஸ்வராஜ், ''மிஸ்டர் மினிஸ்டர், இரண்டு சிறிய இந்துச் சிறுமிகளை கடத்தியிருக்கிறார்கள். அதுமட்டுமின்றி அப்பெண்களை கட்டாய மதமாற்றமும் செய்து திருமணம் நடத்தியிருக்கிறார்கள். இதுபற்றி இஸ்லாமாபாத்தில் உள்ள இந்தியத் தூதரிடம் ஒரு அறிக்கையை நான் கேட்டேன். இதனால் நீங்கள் பதட்டமடைந்து நிலைகுலைந்தது போதும். உங்கள் குற்ற உணர்ச்சியைத்தான் இது காட்டுகிறது'' என்றார். இதற்கு பாகிஸ்தான் அமைச்சர்,''மேடம், மற்ற நாடுகளில் உள்ள சிறுபான்மையின மக்களின் உரிமைக்காக நீங்கள் கவலைப்படுவதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் உங்களது நாட்டிலுள்ள சிறுபான்மையினரிடத்தில் இதே அக்கறையை காட்டுங்கள். குஜராத் மற்றும் காஷ்மீரில் நடந்தவற்றுக்கு நீங்கள் கவலைப்பட உங்கள் மனசாட்சி அனுமதிக்கும் என்று நான் உண்மையிலேயே நம்புகிறேன்'' என்றார்.
இவர்கள் இருவரும் ட்விட்டரில் இப்படி சண்டையிட்டு கொண்டிருக்கும் போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரத்திற்காக தனி குழு அமைக்கப்படும் என்று அறிவித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.