கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
டிரம்ப்பின் அறிவுறுத்தலின்பேரிலேயே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க ராணுவம் அறிவித்தது. இந்த தாக்குதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இறந்த சுலைமானிக்கு பதிலாக, அவருக்கு அடுத்த நிலையில் இருந்த இஸ்மெயில் கானி தளபதியாக பதவியேற்றுள்ளார். இந்நிலையில், ஈரான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள ஈராக் நாட்டிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அன்று ஈராக் பாராளுமன்றத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமெரிக்க துருப்புக்களை அந்நாட்டை விட்டு வெளியேற்றுவதற்காக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப், "ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகளை வெளியேற்றினால், பல பில்லியன் டாலர்களை ஈராக் இழப்பீடாக தர வேண்டியிருக்கும். அவ்வாறு தர மறுக்கும் பட்சத்தில், ஈராக்கிற்கு எதிராக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்படும்" என எச்சரித்துள்ளார்.