
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் உள்நோக்கத்துடன் அபராதம் விதிப்பதாக லாரி ஓட்டுநர் செந்தில்குமார் என்பவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் ஹைதராபாத்தில் இருந்து சோலார் பேனல் லோடு ஏற்றிக்கொண்டு கடம்பூரில் இறக்குவதற்காக வந்தேன். லோடு இறக்கிவிட்டு திரும்பி வந்த வண்டிக்கு 3,500 ரூபாய்க்கு கேஸ் போட்டு இருக்காங்க. எதுக்காக கேஸ் போட்டீங்க என்ற கேள்விக்கு சரியான பதில் இல்லை. சோலார் பேனல் இறக்கிற கம்பெனிக்காரர்கள் கடம்பூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மேடத்துக்கு எதுவும் தரலை என்பதற்காக லாரிகளை நிறுத்தி கேஸ் போட்டால் தான் ஒரு வழி பிறக்கும்ன்னு உங்க மேல கேஸ் போடுறோம் அப்படின்னு சொல்லி நேத்து நைட்டு கேஸ் போட்டாங்க. அவங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு தெரியலை...

நம்ம கிட்ட எல்லா ரெக்கார்டும் தெளிவா இருக்கு. இது தவிர இன்னும் இரண்டு, மூன்று லாரிகளுக்கு கேஸ் போட்டு இருக்காங்க. லோடு உள்ள வண்டிகளுக்கு ரூபாய் எட்டாயிரத்து ஐநூறு, ஏழாயிரம் எனவும், லோடு இறக்கிச் செல்லும் வண்டிகளுக்கு 3,500 ரூபாய் அபராதம் போட்டு இருக்காங்க. ஒண்ணுமே புரியல. இன்ஸ்பெக்டர் மேடம் எதுக்காக கேஸ் போட்டாங்கனே தெரியல. எந்த ஒரு ரீசன் இல்லாமல் கேஸ் போட்டு இருக்காங்க ” என்று அந்த வீடியோவில் தெரிவித்திருக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி தற்போது வைரலாகி வருகிறது.
இது குறித்து கடம்பூர் இன்ஸ்பெக்டர் கவிதாவை தொடர்பு கொண்ட போது அழைப்பை ஏற்கவில்லை. காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “கயத்தாறு, கடம்பூர், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கில் காற்றாலைகள் அமைக்கப்பட்டு மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. சோலார் மின் உற்பத்திக்காக சோலார் பேனல்களும் இறக்கப்பட்டு வருகின்றன. இதில் கடம்பூர் லிமிட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்ற இன்ஸ்பெக்டர் மீது பணப் பரிவர்த்தனை தொடர்பாக பல்வேறு புகார்கள் கூறப்படுகிறது. இன்ஸ்பெக்டருக்கு பின்னணியில் தனிப்பிரிவு போலீசும், வேறு சில போலீசாரும் கூட்டு சேர்ந்து திட்டம் வகுத்து கொடுக்கின்றனராம். இந்த தகவல்கள் எஸ்.பி. வரை சென்றுள்ளது. இதற்கிடையே தான் இந்த வீடியோ இப்போது வெளியாகியுள்ளது. எஸ்.பி. தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
செய்தியாளர் - எஸ்.மூர்த்தி