வங்காளதேசத்தில் பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி சார்பில் ஷேக் ஹசீனா 15 வருடங்களாக பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்த நாட்டில் விரைவான பொருளாதார வளர்ச்சியும், இந்தியாவை விட அதிகமான உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை எட்டிய போதும், அங்கு கடுமையான பணவீக்கம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் அதிகரித்து வரும் செலவுகளை, குறிப்பாக உணவுப் பொருட்களின் விலையேற்றத்தைச் சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கின்றனர். மேலும், பிரதமர் ஷேக் ஹசீனா மீது ஊழல் மற்றும் மனித உரிமை மீறல் போன்ற குற்றச்சாட்டுகள் அவ்வப்போது எழுந்து வருகின்றன. அதனால், வங்கதேச தேசிய கழகம் மற்றும் ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய இரு பிரதான எதிர்க்கட்சிகள், பிரதமர் உடனடியாக பதவி விலகவும், ஆளும் ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் முடியும் வரை கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன.
அதில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கழகத்தின் தலைவர் கலிதா ஜியா, ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நோய்வாய்ப்பட்ட நிலையில் வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இதனால், அவரது ஆதரவாளர்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு அரசைக் கலைக்க கோரி கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்த தொடர் போராட்டங்கள் காரணமாக போலீசாருக்கும், வங்கதேச தேசிய கழகத்தினருக்கும் இடையே பல இடங்களில் மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன. எதிர்க்கட்சிகள் நடத்தும் இந்த போராட்டத்துக்கு ஆளும் கட்சியான பங்களாதேஷ் அவாமி லீக் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், கட்சி சார்பற்ற அரசாங்கம் அமைக்கப்படுவதற்கு சட்டத்தில் இடமில்லை என உச்சநீதிமன்றம் கூறி இருப்பதாக வங்கதேச அரசும் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஆனால், இதற்கு வங்கதேச தேசிய கழகம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆளும் அவாமி லீக் ஆட்சியில் இருந்தால் தேர்தல் நியாமான முறையில் நடக்காது என தெரிவித்துள்ள எதிர்க்கட்சி, அதற்கு முன்பாக பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, இந்த கோரிக்கையை வைத்து வங்கதேச தேசிய கழகம் கட்சி நேற்று (19-12-23) நாடு தழுவிய அளவில் ரயில் நிறுத்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
அப்போது, டாக்காவில் மோகன்கஞ்ச் எக்ஸ்பிரஸ், ஏர்போர் ரயில் நிலையத்தில் புறப்பட்ட நிலையில் மர்மநபர்கள் சிலர் ரயிலுக்கு தீ வைத்தனர். புறப்பட்ட சில மணி நேரத்தில் ரயிலின் மூன்று பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததை அடுத்து, தேஜ்காவ்ன் நிலையத்தில் ரயில் நிறுத்தப்பட்டது. அப்போது, அங்கு தயாராக இருந்த தீயணைப்பு துறையினர், பல மணி போராட்டத்துக்கு பின், தீயை அணைத்தனர். இந்த சம்பவத்தில், அந்த ரயிலில் இருந்த பெண், அவரது மகன் உட்பட 4 பேர் தீயில் சிக்கி பலியாகினர். எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கழகம் ரயில் நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த போது ரயிலில் தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.