பலத்த மழையின் காரணமாக இரவு நேரத்தில் ஏற்பட்ட திடீர் மண்சரிவால் 33 பேர் பலியான துயர சம்பவம் கேமரூன் நாட்டில் நடந்துள்ளது.
மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான கேமரூன் நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள நகரமான பாபூசத்தில் நேற்றிரவு கனமழை பெய்தது. அப்போது அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 33 பேர் பலியானதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும் இந்த நிலச்சரிவில் 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்தச் சம்பவம் இரவில் நிகழ்ந்ததால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இரவு நேரம் என்பதால் தூங்கிக் கொண்டிருந்த பல குழந்தைகளும் உயிரிழந்திருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து, ஆபத்தான அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லும்படி அப்பகுதி ஆளுநர் ஆவா ஃபோன்கா அகஸ்டின் தெரிவித்துள்ளார்.