பிரசவத்தின்போது ஏற்பட்ட மூளை பக்கவாதத்தால் மறதி நோய்க்கு ஆளாகி, குழந்தை போல மாறிப்போன தனது மனைவியை மீட்டெடுத்த கணவரின் வாழ்க்கை கதை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தை சேர்ந்தவர்கள், ஸ்டீவ் கர்டோ (steve curto), கேம்ரே (camre) தம்பதியினர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னர் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவியை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதித்திருந்தார் ஸ்டீவ். பிரசவம் முடிந்து குழந்தை நலமுடன் உள்ளது என்ற செய்தி அவரது காதுகளுக்கு எட்டிய மறுகணமே, மனைவி மூளை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுவிட்டார் என்ற செய்தியும் அவரது காதுகளில் விழுந்தது.
பச்சிளம் குழந்தையை கையில் ஏந்தி நின்றுகொண்டிருந்த ஸ்டீவிடம், அனைத்தையும் மறந்திருந்த அவரது மனைவி மற்றொரு குழந்தையாக ஒப்படைக்கப்பட்டார். மற்றவர்களிடம் உரையாடுவது எப்படி, பல் தேய்ப்பது எப்படி, உடை அணிவது எப்படி என்ற அடிப்படை விஷயங்களை கூட மறந்திருந்த கேம்ரேவை தனது பச்சிளம் குழந்தையோடு சேர்த்து மற்றொரு குழந்தையாக வளர்க்க ஆரம்பித்தார் ஸ்டீவ். 7 ஆண்டுகால போராட்டம், தனது குழந்தைக்கு கற்றுக்கொடுத்த அனைத்தையும், தனது மனைவிக்கும் கற்றுக்கொடுத்து அவரை இன்று ஒரு சாதாரண மனிதராக மாற்றியுள்ளார் ஸ்டீவ். தனது வாழ்க்கை குறித்தும், தனது மனைவியுடனான காதல் குறித்தும் ஒரு புத்தகத்தை எழுதி தற்போது வெளியிட்டுள்ளார்.
அந்த புத்தகத்தில் தங்களது வாழ்க்கை குறித்து விவரித்துள்ள ஸ்டீவ், "நான் முதலில் கேம்ரேவைச் சந்தித்தபோது, முதல் பார்வையிலேயே ஒரு அழகிய காதல் ஏற்பட்டது. அந்த நாளை திரும்பிப் பார்க்கும்போது எனக்கு அழகான தருணங்கள் என் கண் முன்னே வந்து செல்கின்றன. ஆனால், பிரசவத்திற்கு பின் என் மனைவிக்கு அந்த நினைவுகள் இல்லாமல் போய்விட்டன. என் மனைவிக்கு நான் யார் என்று தெரியவில்லை. அதேபோல எங்கள் குழந்தையை பற்றியும் அவளுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்த நேரம் நான் முற்றிலும் உடைந்துபோயிருந்தேன். ஆனால் அதேநேரத்தில் நான் என் வாழ்க்கையில் அன்பின் தேவையை உணர்ந்தேன். அப்போதிலிருந்துதான், எங்கள் வாழ்வின் புதிய பயணம் ஒன்றை நாங்கள் தொடங்கினோம்.
35 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் மருத்துவமனையிலிருந்து வெளியேறினோம். யாரென்று தெரியாத என்னை அவள் நம்ப ஆரம்பித்தாள். அப்போதும் அவள் என்னிடம் `நீ யார் என்று எனக்குத் தெரியாது, ஆனால், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்’ என்று சொன்னாள். அந்த வார்த்தைகள்தான் இன்றுவரை என்னை முன்னோக்கி தள்ளிக்கொண்டிருக்கின்றன. எங்கள் மகனின் பெயரை நினைவில் வைத்துக்கொள்ளவே அவளுக்கு சுமார் 1 வருடம் ஆனது.
பக்கவாதம் காரணமாக 6 ஆண்டுகளில் சுமார் 400 முறை அவளுக்கு வலிப்பு ஏற்பட்டது. நீங்கள் விரும்பும் ஒருவர் உங்கள் கண் முன்னே நரக வேதனையை அனுபவிப்பதைப் பார்ப்பது கடினம். ஆனால், நான் 6 ஆண்டுகளாக அதைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடவுள் மீது கொண்ட நம்பிக்கையால் எதிர்காலம் மீது மிகப்பெரிய நம்பிக்கை வைத்துளோம். தாய்மை என்றால் என்ன என்றே தெரியாமல் இருந்த கேம்ரே தற்போது ஒரு சிறந்த தாயாக மாறியுள்ளார் " என கூறியுள்ளார். அவரது மனைவி கூறிய "ஆனால், நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று எனக்குத் தெரியும்" என பொருள்படும் "But I know I love you" என்பதையே தனது புத்தகத்தின் தலைப்பாக வைத்து இந்த புத்தகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.