அமெரிக்க ஜனநாயகத்தில் நாடாளுமன்ற விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்து, அந்த நாட்டு ஜனநாயகத்தையே முதன்முறையாக கேலிக்கூத்தாக்கி இருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப்.
அமெரிக்க ஜனாதிபதிகளில் இதுவரை யாரும் இப்படி இருந்ததில்லை என்று சொல்லுமளவுக்கு ட்ரம்ப் அந்த நாட்டு மக்களின் கேலிக்கு ஆளாகி இருக்கிறார். மிகச் சொற்ப வாக்குகளில் வென்ற ட்ரம்ப் மீது தேர்தல் மோசடி உள்ளிட்ட பல புகார்கள் இருக்கின்றன.
முகநூல் கணக்குகளை தேர்தல் பிரச்சாரத்துக்கு மோசடியாக பயன்படுத்திய முதல் ஆள் என்று ட்ரம்ப்பை சொல்லலாம். 2020- ஆம் ஆண்டு தேர்தலில் இவரை எதிர்த்து போட்டியிடவுள்ள ஜோ பைடனுக்கு எதிராக சில சதித்திட்டங்களை ட்ரம்ப் தீட்டியதாக சமீபத்தில் புகார் எழுந்தது. ஜோ பைடன் குறித்து விசாரிக்குமாறு உக்ரைன் ஜனாதிபதிக்கு தொலைபேசியில் ட்ரம்ப் வேண்டுகோள் விடுத்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் கண்டனத்தீர்மான விசாரணை தொடங்கியுள்ளது.
இது நாடாளுமன்ற கோர்ட் என்றே கருதப்படுகிறது. இந்த விசாரணையில் ட்ரம்ப் உக்ரைன் ஜனாதிபதியிடம் பேசியது நிரூபிக்கப்பட்டால், அவர் பதவி விலக நேரும். இந்த விசாரணைக்காக ஐரோப்பிய யூனியனுக்கான அமெரிக்க தூதர் கோர்டன் சோன்ட்லாண்ட் அமெரிக்காவுக்கு வந்தார். ஆனால், அவர் விசாரணையில் பங்கேற்க சில மணிநேரம் முன்பாக, அவருக்கு ட்ரம்ப் தடை விதித்தார்.
இது குறித்து வெள்ளை மாளிகையின் வழக்கறிஞர் பேட் சிபோல்லோன் எழுதிய கடிதத்தில், “அடிப்படை இல்லாத குற்றச்சாட்டின் மீது ட்ரம்புக்கு எதிராக நடத்தப்படும் விசாரணையில் அவரோ, அவருடைய நிர்வாகமோ பங்கேற்காது” என்று குறிப்பிட்டுள்ளார். ட்ரம்புக்கு எதிரான சாட்சிக்கு சில மணி நேரத்துக்கு முன் தடை விதித்தது ஏன் என்ற கேள்விக்கு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் பதிலளிக்க மறுத்துவிட்டது.