
சிதம்பரம் அருகே அண்ணாமலை நகர் அண்ணாமலை பல்கலைக்கழக வாயிலில் உள்ள மொழிப்போர் தியாகி ராஜேந்திரன் சிலை முன்பு திமுக மாணவர் அணி சார்பில் அதிமுக துணையுடன் ஒன்றிய பாஜக அரசு கொண்டுவந்துள்ள நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்யநாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்ற தலைவர் பழனி கலந்துகொண்டு நீட் தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்களின் நிலைமைகள் குறித்து பேசினார். இதில் மாணவர் அணியின் நிர்வாகிகள் ஆதித்யா, ஆனந்த், ரித்தீஷ் பாபு. இளைஞரணி அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு ஒன்றிய பாஜக அரசை கண்டித்து பதாகைகள் ஏந்தி கோஷங்களை எழுப்பினார்கள். இதனை தொடர்ந்து பல்கலைக்கழக வாயிலில் மாணவர்கள் மற்றும் வணிகர்களை சந்தித்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.