
சிதம்பரம் அருகே வேளக்குடியில் கொலை வழக்கில் தொடர்புள்ளதாக கூறப்படும் சந்தேக நபரின் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு நடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிதம்பரம் அருகேயுள்ள மேலமூங்கிலடி கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார்(24). கூலித் தொழிலாளியான இவர் மீது பைக் திருட்டு வழக்குகள் உள்ளது. இவரது மனைவி ஐஸ்வர்யா(23). சிதம்பரம் அருகே உள்ள வேளக்குடி பகுதியை சேர்ந்தவர் பாலகணபதி(23). கூலித் தொழிலாளி. இவர் மீதும் பைக் திருட்டு வழக்குகள் உள்ளது. வினோத்குமார், பாலகணபதியும் நண்பர்கள். இந்நிலையில் பாலகணபதிக்கும் வினோத்குமார் மனைவிக்கும் கூடா நட்பு இருந்துள்ளது.
இதுபற்றி அறிந்த வினோத்குமார் கடந்த 15ம் தேதி இரவு அவரது நண்பர் ஸ்ரீராம் உள்ளிட்ட சிலருடன் சேர்ந்து பாலகணபதியை அழைத்துக் கொண்டு மேலமூங்கிலடி வெள்ளாற்றுக்கரை பகுதியில் உள்ள கருவ மர தோப்பு பகுதிக்கு அழைத்து சென்று மது அருந்தியுள்ளனர். பின்னர் அவர்கள் பாலகணபதியை வெட்டி கொலை செய்து விட்டு ஓடிவிட்டனர்.
இதுகுறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார், ஸ்ரீராம்(21) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் போலீசார் இந்த கொலை வழக்கில் சந்தேக நபரான வேளக்குடியை சேர்ந்த ரமேஷ் மகன் கதிரவனை(20) விசாரணை செய்து வந்தனர்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் மர்ம கும்பல் ஒன்று எரிதிரியுடன் கூடிய மண்ணெண்ணெய் பாட்டிலை கதிரவன் வீட்டின் மீது வீசியுள்ளனர். இதில் அவரது வீட்டில் லேசாக தீப்பிடித்து. அவர் வீட்டின் அருகில் இருந்த அடகுக் கடையின் மேல் சுவற்று பகுதி தீப்பிடித்து கருகியது. இதில் யாருக்கும், உடமைகளுக்கும் பாதிப்பு இல்லை. கொலை செய்யப்பட்ட பாலகணபதியின் உறவினர்கள் இதை செய்திருக்கலாம் எனச் சந்தேகித்து அண்ணாமலை நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.