திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குண்டலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன். இவர் சிறிய அளவிலான கார்மெண்ட்ஸ் நடத்தி வந்தார். மொத்தமாக துணிகளை எடுத்து வந்து பனியன், ஷார்ட்ஸ் உள்ளிட்டவைகளை தைத்து திருப்பூருக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வந்தார்.
இந்நிலையில் லட்சுமணன் சமூகவலைத்தளங்களில் வீடியோ ஒன்றை பதிவிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில், வங்கியில் கடன் வாங்கி புதிய வீடு ஒன்றை கட்டியதாகவும், கரோனா காலகட்டத்தில் கூட கடனை சரியான முறையில் அடைத்துவிட்டேன். தற்போது நூல் விலை ஏற்றத்தால் தொழில் பாதிப்படைந்து கடனை கட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. தனக்கு வீட்டுக் கடன் கொடுத்த வங்கிகள் கடன் தள்ளுபடி ஆகி விடும் எனச் சொல்லி தன்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டது. தற்போது கடனை கட்ட சொல்லி நெருக்கடி கொடுத்ததால் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.
தற்கொலை செய்துகொண்ட லட்சுமணன் உடலை கைப்பற்றிய நிலக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பனியன் கம்பெனி தொழிலாளி ஒருவர் வீடியோ வெளியிட்டு தூக்குப் போட்டுக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.