
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொல்லியல் துறை மானியக் கோரிக்கை விவாதங்களுக்கு பதில் அளித்துப் பேசிய நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள், தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களாக அறிவித்தார். இதில் விருதுநகர் மாவட்டம், மரையூர் சத்திரமும் ஒன்று.
இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு தெரிவித்ததாவது, 'மரை எனும் மானின் பெயரில் அமைந்த மரையூரில், 300 ஆண்டுகள் பழமையான ராணி மங்கம்மாள், மருதுபாண்டியர் வரலாற்றுக்கு ஆதாரமாக உள்ள சத்திரத்தை பழுது நீக்கி பாரம்பரியச் சின்னமாகப் பாதுகாக்க நானும், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ராஜபாண்டியும் கோரிக்கை விடுத்திருந்தோம்.
உடனடியாக சத்திரத்தை உடன் ஆய்வு செய்த நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விரைவில் அது பாரம்பரிய சின்னமாக பாதுகாக்கப்படும் என அறிவித்தார். வியாழக்கிழமை சட்டப்பேரவையில், மரையூர் சத்திரம் உள்ளிட்ட தமிழ்நாடு முழுவதும் உள்ள 12 நினைவுச் சின்னங்களை தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் நினைவுச் சின்னங்களாக அமைச்சர் அறிவித்தார். இது எங்களுக்கும் ஊர் மக்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. இதற்காக முதலமைச்சர், தொல்லியல் துறை அமைச்சர், விருதுநகர் மாவட்ட ஆட்சியர், அலுவலர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்'' இவ்வாறு அவர் தெரிவித்தார்.