வெள்ளை மாளிகை பகுதியில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில், கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அந்நாட்டு அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்து வந்தார். அப்போது வெள்ளை மாளிகையின் வடக்கு பக்கம் திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது. இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் அதிபர் ட்ரம்ப்பை அவசர அவசரமாக அங்கிருந்து வெளியேற்றி பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றனர். பின்னர், துப்பாக்கி சத்தம் கேட்ட இடத்திற்கு ஆயுதமேந்திய பாதுகாப்பு குழுவினர் சென்று பார்வையிட்டனர்.
அப்போது, ஆயுதம் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்பட்ட நபர் உரிய அனுமதியின்றி வெள்ளை மாளிகை பகுதிக்குள் நுழைய முயன்றதால் பாதுகாப்பு அதிகாரிகளால் சுடப்பட்டிருப்பது தெரிய வந்தது. சுடப்பட்ட நபர் மருத்துவமனைக்கு கொண்ட செல்லப்பட்ட நிலையில், அதிபர் ட்ரம்ப் மீண்டும் பத்திரிகையாளர்கள் இருக்கும் இடத்திற்கு வந்து தனது சந்திப்பை நிறைவு செய்தார். சுடப்பட்ட நபருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சம்பவத்தால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.