பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் அமைந்துள்ள 850 ஆண்டுகள் பழமையான நோட்ரடேம் கதீட்ரல் தேவாலயத்தில் நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
அந்நாட்டின் சிறப்பு வாய்ந்த பாரம்பரிய சின்னமாக திகழும் இந்த தேவாலயத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 6.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. தேவாலயத்தின் மேற்கூரை பகுதியில் பற்றிய தீ கொஞ்சம் கொஞ்சமாக பரவி தேவாலயம் முழுவதையுமே ஆக்கிரமித்தது. இந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை அணைத்தனர்.
அந்நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய சின்னமாகவும், ஐரோப்பிய கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழ்ந்த, யுனெஸ்கோவின் பாரம்பரிய சின்னங்களில் ஒன்றான இந்த கட்டிடத்தில் தீ பிடித்தது அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் நிருபர்களிடம் கூறுகையில், "தீயணைப்பு வீரர்கள் மிகச்சிறப்பாக பணிபுரிந்து தீயை அணைத்துள்ளார்கள். தற்போது கட்டிடங்களை குளிர்விக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கத்தீட்ரல் தேவாலயத்தை மீண்டும் புனரமைத்து, மறுகட்டமைப்பு செய்யப்படும்" என தெரிவித்துள்ளார்.