உக்ரைன் மீது தாக்குதல் நடத்த நேற்று காலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்ட நிலையில், ரஷ்ய படைகள் உக்ரைன் மீது தீவிரமான தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. போர் விமானங்கள் மூலம் குண்டுகள் வீசியும், ஏவுகணைகள் மூலமும் தொடர் தாக்குதல் நடந்து வருவதால், உக்ரைன் மக்கள் மெட்ரோ நிலையங்களில் இருக்கும் வெடிகுண்டு பாதுகாப்பு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
ரஷ்ய ராணுவத்தின் தாக்குதலில் உக்ரைனை சேர்ந்த மேலும் 25 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை மொத்தமாக 127 உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல் வெளியிட்டுள்ளது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ''அமெரிக்காவின் தற்போதைய அதிபர் ஜோ பைடன் நிலைமையைச் சரியாகக் கையாண்டிருந்தால் உக்ரைனுக்கு தற்பொழுது இப்படியொரு சூழ்நிலை வந்திருக்காது. இதே நான் அமெரிக்காவில் ஆட்சியில் இருந்திருந்தால் உக்ரைன் மீது புதின் படையெடுத்திருக்கமாட்டார். ஆனால் இப்பொழுது போர் தொடங்கிவிட்டது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்துகொண்டே போகிறது. இதனால் புதின் பணக்காரராகிக் கொண்டிருக்கிறார்'' என்றார்.