
கடலூரில் கணவனை இழந்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பில் இருந்த நபர், பெண்ணை கொலை செய்து என்எல்சி சுரங்கப் பகுதியில் வீசிய சம்பவத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்துள்ளது வேப்பங்குறிச்சி பகுதி. அங்கு வசித்து வந்தவர் பிரபாவதி (33). இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் இரண்டு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். கடந்த ஏழாம் தேதி வழக்கம்போல வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற பிரபாவதி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் பிரபாவதி கிடைக்காததால் அவருடைய தாயார் மந்தாரக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின் அடிப்படையில் பிரபாவதியின் மொபைலுக்கு இறுதியாக கால் செய்தது யார் என்பது தொடர்பாக போலீசார் சோதனை செய்த பொழுது சம்பத் என்பவருடன் அவர் பேசி இருந்தது தெரியவந்தது. வடக்கு வெள்ளூர் பகுதியைச் சேர்ந்த சம்பத் திருமணமாகி கருத்து வேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், பிரபாவதிக்கும் சம்பத்திற்கும் இடையே முறையற்ற தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் பிரபாவதி வேறு ஒரு நபருடன் தொடர்பில் இருந்ததாக சந்தேகப்பட்ட சம்பத் அது குறித்து அவரிடம் அடிக்கடி கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சம்பத்
இந்நிலையில் சம்பவத்தன்று மதுபோதையில் இருசக்கர வாகனத்தில் பிரபாவதியை கோவிலுக்கு அழைத்துச் சென்ற சம்பத், வேறு ஒருவருடன் தொடர்பு இல்லை என சத்தியம் செய்யுமாறு கேட்டுள்ளார். அதற்கு வேறு ஒருவருடன் இருக்கும் உறவை துண்டிப்பதாக சத்தியம் செய்துள்ளார் பிரபாவதி. இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கோவிலில் வைத்து பிரபாவதி சம்பத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. திடீரென மயங்கி கீழே விழுந்த பிரபாவதியை தனது இருசக்கர வாகனத்தில் வைத்து வீட்டிற்கு கொண்டு செல்ல சம்பத் முயன்றுள்ளார். ஆனால் செல்லும் வழியிலேயே பிரபாவதி மீண்டும் கீழே வீழ்ந்துள்ளார். அவர் உயிரிழந்து விட்டதாக நினைத்த சம்பத் என்எல்சி ஒன்றாவது சுரங்க விரிவாக்க பகுதிக்கு சென்று பிரபாவதியின் உடலை தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளார்.
சம்பத்தை கைது செய்து போலீசார் விசாரணை செய்ததில் இந்த அதிர்ச்சி தகவல் அனைத்தும் வெளியான நிலையில், மந்தாரக்குப்பம் போலீசார் மத்திய தொழிற்சாலை பாதுகாப்புபடை உடன் சுரங்கத்திற்கு சென்று அழுகிய நிலையில் கிடந்த பிரபாவதியின் உடலை மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.