இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்தது. இதுவரை 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று சபதம் எடுத்துள்ள இஸ்ரேல் ராணுவம் காசாவை நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது.
அதே வேளையில், இந்த போரை எதிர்த்தும், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் நிலைப்பாடை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் உள்ள மாணவர்கள் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். போராடு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. இந்த நிலையில், நேற்று (26-05-24) இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் மீது ஹமாஸ் அமைப்பினர், ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, இஸ்ரேல் அந்த ஏவுகணைகளை இடைமறித்து அழித்ததாக தெரிவிக்க்கப்பட்டது. அதனால், அங்கு எந்தவித உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று கூறப்பட்டது.
போர் சூழல் ஏற்படும் அபாயம் இருந்ததால், காசாவில் இருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான மக்கள் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். இந்த நிலையில், இஸ்ரேல் படையினர் ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெற்கு காசாவில் உள்ள ரபா நகரம் மீது அதிரடி வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் ரபா பகுதியில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்ட 35க்கும் மேற்ப்பட்ட பாலஸ்தீன மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பெண்களும், குழந்தைகளும் ஆவர் என காசா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், ஏராளமான மக்கள் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்த அவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு பாலஸ்தீன அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், காசாவில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.