லடாக் மோதலுக்கு பிறகு, சீன நிறுவனத்தின் டிக் டாக், வி சாட், யூசி ப்ரவுசர், ஹலோ, ஷேரிட் என இந்தியாவில் அதிகம் பயன்படுத்தும் சீன செயலிகளுக்கு, அந்த ஆப்கள் பயனாளர்களின் தகவல்களை திருடுவதாக கூறி, மத்திய உள்துறை அமைச்சகம் கடந்த மாதம் 29-ஆம் தேதி தடைவிதித்திருந்தது.
இந்த செயலிகளில் மிகவும் முக்கியமாககவும், அதிக பயனாளர்களையும் இந்தியாவில் கொண்டுள்ள டிக் டாக் செயலி இந்தியாவில் மீண்டும் கால்பதிக்க புதிய திட்டம் ஒன்றை வகுத்து வருவதாக தகவல்கள் வந்துள்ளது.
அமெரிக்காவை விட இந்தியாவில், டிக் டாக் செயலி உபயோகிக்கும் பயனர்கள் எண்ணிக்கை இருமடங்காக இருந்தது. இந்நிலையில் இந்த தடை காரணமாக டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிறுவனமான பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படும் என்று கணிக்கப்பட்டிருந்தது. இந்தியாவைத் தொடர்ந்து, அமெரிக்காவும் டிக் டாக் செயலியை தடைசெய்ய ஆலோசித்து வரும் நிலையில், சீனாவில் இருந்து வேறு ஒரு நாட்டிற்கு தனது தலைமை இடத்தை மாற்ற செயலியின் தலைமை நிறுவனம் பைட் டான்ஸ் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதேபோல் செயலியின் வியாபாரத்தை கருத்தில்கொண்டு பல மாற்றங்களை நிர்வாக அமைப்பில் மேற்கொள்ளப்படுவதாகவும் அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். பயனாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்து, மகிழ்ச்சியான தளத்தை உருவாக்குவதே எங்கள் முதல் நோக்கம் எனவும் டிக் டாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.