உக்ரைன் - ரஷ்யா இடையே கடந்த பிப்ரவரி மாதம் முதல் போர் நிலவி வருகிறது. ரஷ்யா உக்ரைனில் தொடர்ச்சியாகத் தாக்குதல் நடத்தி முன்னேறி வரும் நிலையில், உக்ரைன் நாட்டு மக்கள் லட்சக்கணக்கானோர் அந்நாட்டை விட்டு வெளியேறினர். மேலும் ஏராளமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய இந்தப் போர் தொடர்ச்சியாக நீண்டு கொண்டே இருக்கிறது.
இதனிடையே ஸ்வீடன் நேட்டோ கூட்டமைப்புடன் இணைவதற்கான நேரம் வந்துவிட்டது என அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. ரஷ்யப் படைகள் உக்ரைனில் தொடர்ச்சியாக முன்னேறி வரும் சூழலில் ஸ்வீடன் மற்றும் அதன் அண்டை நாடான பின்லாந்து நேட்டோ கூட்டமைப்புடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்தது.
நேட்டோ எனும் வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு என்பது 1949 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதன்படி தங்களது கூட்டமைப்பில் உள்ள நாடுகளை பிற நாடு ஏதாவது தாக்குகையில் கூட்டமைப்பில் உள்ள நாடுகள் மொத்தமாகச் சேர்ந்து அந்த நாட்டை எதிர்க்கும். இந்நிலையில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நேட்டோ உடன் இணைவதற்கு விருப்பம் தெரிவித்த நிலையில் கடந்த மாதம் 31 ஆவது உறுப்பு நாடாக பின்லாந்து நேட்டோ உடன் இணைத்துக்கொள்ளப்பட்டது. ஆனால் ஸ்வீடன் இணைத்துக் கொள்ளப்படவில்லை. நேட்டோ கூட்டமைப்பில் உறுப்பு நாடாக இருக்கும் துருக்கி மற்றும் ஹங்கேரி போன்ற நாடுகள் ஸ்வீடன் இணைவதை விரும்பவில்லை. பயங்கரவாதக் குழுவாகக் கருதப்படும் குர்திஸ்தான் தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களுக்கு புகலிடமாக ஸ்வீடன் உள்ளது என்பது துருக்கியின் வாதம்.
இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சரான ஆண்டனி ஃப்ளிங்டன் ஸ்வீடன் நேட்டோ கூட்டமைப்புடன் இணைவதற்கு இது சரியான நேரமாக இருக்கும் எனக் கூறியுள்ளார். செவ்வாய்க்கிழமை வடக்கு ஸ்வீடனில் செய்தியாளர்களைச் சந்தித்த ஆண்டனி ஃப்ளிங்டன், “அமெரிக்காவின் கண்ணோட்டத்தில், ஸ்வீடன் நேட்டோ உடன் இணைப்பதற்கு இறுதியான முடிவெடுக்க இது சரியான தருணம்” என்று கூறியுள்ளார்.