இலங்கை தலைநகர் கொழும்புவில் ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்றும் இரண்டு இடங்களில் குண்டு வெடித்தது.
இந்த தாக்குதல்களில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன், கர்நாடகாவின் மஜக நிர்வாகிகள் உள்ளிட்ட 300 க்கும் மேற்பட்டவர்கள் பலியாகினர். இந்த சம்பவம் ஒட்டுமொத்த உலகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சம்பவத்திற்கு இலங்கையை சேர்ந்த நேஷனல் தவ்ஹித் ஜமாத் அமைப்பு தான் காரணம் என இலங்கை அமைச்சர் கூறியிருந்தார். அதனை தொடர்ந்து ஐஎஸ் அமைப்பு இந்த குண்டுவெடிப்புகளுக்கு பொறுப்பேற்றது. இந்நிலையில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் நியூஸிலாந்து கிரிஸ்ட்சர்ச் பகுதியில் மசூதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கான பதிலடியாகத்தான் நடத்தப்பட்டிருக்கிறது என இலங்கையின் பாதுகாப்பு துறை இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். நியூஸிலாந்து மசூதியில் வலதுசாரி கிறிஸ்துவ தீவிரவாதி ஒருவர் கடந்த மாதம் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.