கரோனா தடுப்பூசி தயாராக உள்ளதாகவும், நாளை முதல் இந்தத் தடுப்பூசி மனிதர்கள் மீது சோதிக்கப்பட உள்ளதாகவும் இங்கிலாந்து அறிவித்துள்ளது.
கடந்த வாரம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கரோனாவுக்கு அதிவேகத் தடுப்பூசி தயாரிக்கப்பட்டு வருவதாகவும், வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி வெற்றிகரமாகப் பயன்பாட்டுக்கு வரும் எனவும் கூறினர். அதன்படி இந்தத் தடுப்பூசி பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்ட இந்த காரோனா தடுப்பூசியைக் கொண்டு நாளை முதல் மனிதர்கள் மீது சோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது. இதுவரை கரோனாவுக்கு எந்த மருந்தும் கண்டறியப்படாத நிலையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகளின் இந்த முயற்சி வெற்றியடையும்பட்சத்தில் விரைவில் உலக மக்களுக்கு கரோனா தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.