கரோனா பரவலுக்கு எதிராக உலக நாடுகளின் போராட்டத்துக்கு இந்தியா செய்துவரும் உதவிக்கு சல்யூட் என ஐ.நா. பொதுச்செயலாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 22 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், 1.5 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை இந்த வைரஸ் காரணமாக 14,000-க்கும் பாதிக்கப்பட்டு, 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1900 பேர் இந்த வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கரோனாவைக் கட்டுப்படுத்த இதுவரை அதிகாரபூர்வமாக மருந்துகள் ஏதும் கண்டறியப்படாத சூழலில், மலேரியா மருந்தான 'ஹைட்ராக்ஸி குளோரோகுயின்' மாத்திரைகளைக் கரோனாவுக்கு வழங்கலாம் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கடந்த மாதம் பரிந்துரைத்தது. இதனையடுத்து இந்த மருந்து ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்தது. ஆனால் உலக நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரையை வெளிநாடுகளுக்கு அனுப்பி உதவி செய்ய இந்தியா முன்வந்தது. அந்த வகையில் அமெரிக்கா, பிரேசில், இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியா இந்த மருந்தை ஏற்றுமதி செய்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் இந்த உதவி குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐநா சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸ், "அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளுக்கும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா அனுப்பி வருவது உண்மையில் பாராட்டத்தக்கது. இந்தியாவுக்கு ஐ.நா. சார்பில் சல்யூட் செய்கிறோம். இந்தியா மற்ற நாடுகளுக்கு உதவி செய்ததைப் போல், உதவி செய்யும் நிலையில் இருக்கும் அனைத்து நாடுகளும் மற்ற நாடுகளுக்கு உதவ வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.