இலங்கையின் புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என கோத்தபய ராஜபக்சே ட்வீட் செய்துள்ளார்.
இலங்கையில் 8- வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (16/11/2019) நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
குறிப்பாக இலங்கை பொதுஜன முன்னணி கட்சியை சேர்ந்த வேட்பாளரும், முன்னாள் ராணுவ அமைச்சருமான கோத்தபய ராஜபக்சே மற்றும் புதிய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது.
இந்நிலையில் பொதுஜன முன்னணி கட்சியை சேர்ந்த வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 48,85,035 வாக்குகள் பெற்று வெற்றி பெரும் தருவாயில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சஜித் பிரேமதாச 40,87,947 வாக்குகளை பெற்று தோல்வி அடைந்தார்.
வெற்றி குறித்து கோத்தபய ராஜபக்சே, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், இலங்கையின் "புதிய பயணத்தில் அனைவரும் இணைந்து பயணிப்போம் என்றும், தேர்தல் பரப்புரையில் எப்படி அமைதி காத்தோமோ, அதேபோல் வெற்றியை அமைதி, ஒழுக்கத்துடன் கொண்டாடுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.