
வரும் மே பதினெட்டாம் தேதி நாம் தமிழர் கட்சி சார்பில் கோவை மாபெரும் பொதுக் கூட்டத்திற்கு அக்கட்சி திட்டமிட்டு இருக்கிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் கட்சியின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது நிர்வாகிகள் மத்தியில் சீமான் பேசிய ஆடியோ தற்பொழுது வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் ''2026 சட்டமன்ற தேர்தலில் வென்று வெளியே வந்தால் பல்லாக்கில் மாலை போடுவேன். தோற்று விட்டால் பாடையில் ஏற்றி மாலை போடுவேன். எப்படி பார்த்தாலும் மாலை கன்ஃபார்ம். தோக்குற மாதிரி இருந்தால் பால்டாயில் குடித்துவிட்டு படுத்துக் கொள்ளுங்கள். இந்த படையை சரியாக வழி நடத்திக் கொண்டு போய் வென்று முடிப்பேன் என்ற நம்பிக்கை இருந்தால் மட்டும் என்னுடன் வரலாம். இல்லையென்றால் நீங்கள் பிடித்த கட்சிக்கு போகலாம்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து வந்தேன் என்று சொன்னால் ஸ்டாலின் சீட்டு கொடுத்து விடுவார். தம்பி விஜய் கூட கொடுத்து விடுவார். சொல்லுங்க நானே கூட சேர்த்து விடுவேன். கட்சி பேனர்களில் தறுதலைகள் போல தலையை விதவிதமாக அலங்காரம் செய்து கொண்டு புகைப்படம் வைக்க கூடாது. நாம் தமிழர் பிளக்ஸ் பேனரில் தொண்டர்கள் நிர்வாகி நல்ல புகைப்படங்களை வைக்க வேண்டும்'' என்று பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.
இதற்கு முன்னரே நிர்வாகிகள் மத்தியில் சீமான் காட்டமாக அறிவுறுத்தி பேசிய பேச்சுக்கள் வைரலாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.