இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்நிலையில், தங்கள் நாட்டில் கரோனா மூன்றாவது அலை தொடங்கியுள்ளதாக தென்னாப்பிரிக்காவின் தொற்று நோய்க்கான தேசிய நிறுவனம் அறிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்காவில் கடந்த ஏழு நாட்களாக கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் சராசரி 5,959 ஆக உயர்ந்துள்ளது என கூறியுள்ள தொற்று நோய்க்கான தேசிய நிறுவனம், இது அரசின் அமைச்சக ஆலோசனைக் குழு நிர்ணயித்த புதிய அலைக்கான வரம்பைத் தாண்டியுள்ளதாக கூறியுள்ளது.
மேலும், கரோனா பாசிட்டிவிட்டி சதவீதம் (கரோனா உறுதியாகும் சதவீதம்), 15.7 ஆக உயர்ந்துள்ளதாகவும் தென்னாப்பிரிக்காவின் தொற்று நோய்க்கான தேசிய நிறுவனம் தெரிவித்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், தற்போது இரண்டாம் கட்டமாக 60 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.