வேலைக்காக தன் மனைவி, பிள்ளைகள், அம்மா, அப்பா என்று குடும்பத்தினரை எல்லாம் விட்டுவிட்டு அரபு நாடுகளிலும் மற்றும் பல வெளிநாடுகளிலும் வேலைசெய்யும் நபர்கள் தங்கள் குடும்பத்தினருடன் வீடியோ காலில் பேச வசதியாக இருக்கும் ஒரு செயலிதான் ஸ்கைப் (Skype). தற்போதுள்ள ஸ்கைப் 7.0 மற்றும் கிளாசிக் ஆகிய இரண்டும் வரும் நவம்பர் 1-ஆம் தேதிக்கு மேல் செயல்படாது என்று மைக்ரோசாஃப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கு பதிலாக புதிய அப்டேட்டான ஸ்கைப் 8-ஐ அப்டேட் செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
ஸ்கைப் 7.0 நவம்பர் 1-ஆம் தேதிக்கு மேல் கம்ப்யூட்டர்களில் வேலை செய்யாது என்றும், மொபைல்களில் இது நவம்பர் 15 வரை வேலை செய்யும் அதன் பிறகு அதிலும் சேவை நிறுத்தப்படும் என்றும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. அதே சமயம் ஸ்கைப் கிளாசிக் பொறுத்தவரையில் எப்போது நிறுத்தப்படும் என்று தெளிவாக தேதியை அந்நிறுவனம் அறிவிக்கவில்லை. அதனால் நீங்கள் ஸ்கைப் பயன்படுத்துபவரானால் உடனே அப்டேட் செய்துவிடுங்கள்.