ரஷ்ய அதிபர் பதவிக் காலத்திற்கான வரம்பைத் தளர்த்தும் புதிய சட்டத்திருத்தம் தொடர்பான பொதுவாக்கெடுப்பு இன்று ரஷ்யாவில் தொடங்கியுள்ளது.
ரஷ்ய நாட்டின் சட்டப்படி, ஒருவர் தொடர்ந்து இருமுறைக்கு மேல் அந்நாட்டின் அதிபராகப் பதவிவகிக்க முடியாது. ஆனால் அந்நாட்டின் தற்போதைய அதிபர் புதின் 2012, 2018 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற அடுத்தடுத்த அதிபர் தேர்தல்களில் வெற்றிபெற்று அந்நாட்டின் அதிபராக இரண்டு முறை தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், ரஷ்ய சட்ட அமைப்பின்படி 2024 ஆம் ஆண்டு நடைபெறும் அதிபர் தேர்தலில் புதின் போட்டியிடமுடியாத சூழல் உருவாகியுள்ளது.
2008 வரை, இரண்டு முறை தொடர்ந்து அதிபராக இருந்த புதின், அதன் பின் பிரதமராகப் பதவி வகித்து, பின்னர் மறுபடி 2012 ஆம் ஆண்டு அதிபராகப் பதவியேற்றதைப் போலவே, தற்போதும் செய்ய நேரிடும் என்பதால், அதனை தவிர்ப்பதற்காக அண்மையில் சட்டத்திருத்தம் ஒன்றை ரஷ்ய அரசு கொண்டுவந்தது. கடந்த மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட்ட அந்த சட்டத்திருத்தத்தில், ரஷ்ய அதிபர் பதவிக் காலத்திற்கான வரம்பைத் தளர்த்துவது என முடிவெடுக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் இந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து , ரஷ்ய அரசியலமைப்பு நீதிமன்றமும், அதிபர் புதினும் இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தனர்.
இதனைத்தொடர்ந்து இந்த சட்டத்திருத்தம் குறித்து கடந்த ஏப்ரல் மாதம் 22-ந் தேதி பொது வாக்கெடுப்பு நடத்த ரஷ்யா திட்டமிட்டிருந்தது. ஆனால், கரோனா பரவல் காரணமாக அந்த பொது வாக்கெடுப்பு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று முதல் இந்த தீர்மானம் மீதான பொது வாக்கெடுப்பு தொடங்கியுள்ளது. ஜூலை 1-ந் தேதி வரை இந்த வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு முடிந்ததும் வாக்குகள் எண்ணப்பட்டு உடனடியாக முடிவு அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொது வாக்கெடுப்பிலும் இந்த சட்டத்திருத்தம் வெற்றிபெறும்பட்சத்தில் 2024 மற்றும் 2030 ஆம் ஆண்டிகளில் நடைபெறும் அதிபர் தேர்தல்களிலும் புதின் போட்டியிடலாம்.