மிக பிரபலமான ஆப் என்றால் அது நிச்சயம் ஃபேஸ்புக்தான். ஆனால் இன்று உலக அளவில் ஃபேஸ்புக்கின் ஐம்பது மில்லியன் (ஐந்து கோடி) நபர்களின் கணக்குகள் ஹாக் செய்யப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் 4 கோடி நபர்களின் கணக்குகள் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதாகவும் அந்நிறுவனம் அறிவித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இந்த விஷயத்தை பொறியியல் நிபுணர் குழு கடந்த 25-ஆம் தேதி கண்டறிந்ததாகவும் ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. ஃபேஸ்புக்கில் உள்ள வியூ ஆஸ் (view as) எனும் வசதியைக்கொண்டே இந்த ஹாக் நிகழ்வு நடைபெற்றுள்ளதாகவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மார்க் ஸுக்கர்பர்க் கூறுகையில் "தனிப்பட்ட நபரின் மெசேஜ்கள், பெயர், பாலினம் மற்றும் கணக்கு சம்பந்தப்பட்டவர்கள் எந்த இடத்தை சேர்ந்தவர்கள் எனும் தகவல்களை மட்டுமே ஹாக் செய்துள்ளார்கள், மற்றபடி கிரெடிட் கார்டு சம்மந்தப்பட்டத் தகவல்களை எல்லாம் ஹாக் செய்யவில்லை" என்று தெரிவித்துள்ளார்.
உங்கள் ஃபேஸ்புக் கணக்கு பாதுகாப்பாக உள்ளதா என்பதை கண்டறிய சில வழிமுறைகள். எப்போதும் ஃபேஸ்புக் கணக்கை லாகின் செய்யும்போது நிரந்தரமாக இந்த கடவுச்சொல்லை வைத்துக்கொள்ளலாமா என்று ஃபேஸ்புக் செயலி கேட்க்கும். அதை ஒரு முறை ஓகே செய்துவிட்டால் மறுமுறை லாகின் செய்யும்போது, கடவுச்சொல்லை மீண்டும் போட வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால், உங்கள் ஃபேஸ்புக் கணக்கில் லாகின் செய்யும்போது மீண்டும் கடவுச்சொல்லை ஃபேஸ்புக் செயலி கேட்டால் உங்கள் ஃபேஸ்புக் கணக்கும் ஹாக் செய்யப்பட்டுள்ளது என்று அர்த்தம். அப்படி இருந்தால் உங்களின் கடவுச்சொல்லை மட்டும் மீண்டும் ஒருமுறை மாற்றி அமைத்தால் போதுமானது என்று ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதனால் இன்ஸ்டாகிராமும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. அப்படி இருந்தால் உங்கள் இன்ஸ்டாகிராம் கணக்கையும் மீண்டும் ஃபேஸ்புக் கணக்குடன் இன்னொருமுறை இணைக்கவேண்டும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.