ரஷ்யாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான போர் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலை அடுத்து ரஷ்யாவுடனான தூதரக ரீதியிலான உறவை உக்ரைன் துண்டித்துள்ளது. உக்ரைனில் 70 க்கும் மேற்பட்ட ராணுவ தளங்களை அழித்துவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனுக்குள் நுழைந்த நிலையில் 11 விமான தளங்களையும் அழித்துள்ளதாக அறிவித்துள்ளது.
உக்ரைனுக்குள் நுழைந்து ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தலைநகரான கிவ்-ல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தங்கள் மீது தாக்குதல் நடத்தி வருவதால் ரஷ்யா உலக நாடுகளிலிருந்து துண்டிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்துள்ளார். பல உலக நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதித்திருக்கும் நிலையில் உக்ரைன் அதிபர் இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.