லண்டனில் உள்ள ஃபார்முலா 1 குழுமத்தின் (F 1)முன்னாள் தலைமை நிர்வாகி பெர்னி எக்லெஸ்டோனின் மகள் தமரா எக்லெஸ்டோனின் வீட்டில் இருந்து இந்திய மதிப்பில் சுமார் ரூ. 474 கோடி மதிப்புள்ள நகைகள் திருடப்பட்டுள்ளன.
ஃபார்முலா 1 குழுமத்தின் (F 1)முன்னாள் தலைமை நிர்வாகியின் மகளும், தொலைக்காட்சி பிரபலமுமான இவர் கிறிஸ்துமஸ் விடுமுறையை தனது குடும்பத்துடன் கொண்டாடுவதற்காக, கடந்த வெள்ளிக்கிழமை இரவு பின்லாந்து நாட்டின் லாப்லாந்து நகருக்கு சென்றுள்ளார். அன்று நள்ளிரவு வீட்டின் சுவர் ஏறி குதித்து பின்புறமாக மூன்று திருடர்கள் நுழைந்துள்ளனர். வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த சுமார் 474 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை திருடி சென்றுள்ளனர்.
57 அறைகள் கொண்ட இந்த வீட்டில் 24 மணி நேரமும் காவலாளிகள் ரோந்து பணியில் ஈடுபட்டிருப்பது வழக்கம். மேலும் வீட்டின் சி.சி.டி.வி அறையில் ஒரு காவலர், அந்த தெரு முழுவதும் பல சோதனைச் சாவடிகள் என பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும் நிலையிலும், மூன்று கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து சத்தமில்லாமல் பல அறைகளை திறந்து நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக லண்டன் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.