புதின் உடல்நிலை பற்றி வெளியான தகவல் குறித்து ரஷ்ய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவின் நீண்டகால அதிபரான புதினுக்கு பார்கின்சன் நோய் பாதிக்கப்பட்டிருப்பதாக ரஷ்யாவில் தகவல்கள் பரவி வரும் சூழலில் புதின் அடுத்த ஆண்டு பதவி விலகத் திட்டமிட்டுள்ளார் என்று செய்திகள் வெளியானது. மாஸ்கோவை சேர்ந்த அரசியல் விமர்சகர் வலேரி சோலோவி 'தி சன்' பத்திரிகையிடம், "ரஷ்ய அதிபரின் மகள்கள் மற்றும் 37 வயது காதலி அலினா கபீவா ஆகியோரின் வற்புறுத்தலுக்கு இணங்கி புதின் பதவியை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளார்" என்று கூறினார். தனது குடும்பத்தினரின் ஆலோசனைகளைப் பெரிதும் மதிக்கக்கூடியவராகப் பார்க்கப்படும் புதின், தனது குடும்பத்தாரின் யோசனையை ஏற்றுப் பதவி விளக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், புதின் உடல்நிலை குறித்து ரஷ்ய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்ய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதின் உடல் நிலை சரியாக உள்ளது. அவர் ஆரோக்கியமாக உள்ளார். அவருக்கு பதவி விலகும் எண்ணம் இல்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் அதிபராக 2036 -ம் ஆண்டு வரை புதின் பதவி வகிப்பதற்கு கடந்த ஜூலை மாதம் அந்நாட்டில் சட்டம் இயற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.