அமெரிக்க தேர்தல் முடிவுகள் தொடர்பான ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு அவரது சொந்தக்கட்சிக்குள்ளேயே அதிருப்தி அதிகரித்து வருகிறது.
அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப்பை வீழ்த்தி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில், பெரும்பான்மைக்கு 270 வாக்குகள் தேவையான நிலையில், பைடன் 306 தேர்தல் சபை வாக்குகள் பெற்றார். ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசு கட்சியின் வேட்பாளரும், தற்போதைய அதிபருமான டொனால்ட் ட்ரம்ப் 232 தேர்தல் சபை வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். ஆனால், பைடனின் வெற்றியை ஏற்க மறுக்கும் ட்ரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்று இருப்பதாகக்கூறி அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் வழக்குத் தொடுத்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் தொடர்பான ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு அவரது சொந்தக்கட்சிக்குள்ளேயே அதிருப்தி அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் ட்ரம்ப்பின் கருத்துகளுக்கு ஆதரவாக நின்ற அவரது கட்சியின் மூத்த தலைவர்கள் தற்போது, அந்நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க ஆரம்பித்துள்ளனர். அதோடு, ட்ரம்ப்பை தேர்தல் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வலியுறுத்தியும் வருகின்றனர். அந்தவகையில், ட்ரம்ப்பின் நெருங்கிய நண்பரும், ட்ரம்ப்பை 2016 ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராக முன்மொழிந்த முதல் ஆளுநருமான நியூஜெர்சி முன்னாள் ஆளுநர் கிறிஸ்டி இது குறித்து கூறுகையில், "அதிபரின் சட்டக் குழுவின் நடத்தை ஒரு தேசிய சங்கடமாக அமைந்துள்ளது. ட்ரம்ப் தரப்பு பெரும்பாலும் நீதிமன்ற அறைக்கு வெளியே தேர்தல் மோசடி பற்றி விவாதிக்கிறது, ஆனால் அவர்கள் நீதிமன்ற அறைக்குள் செல்லும்போது அவர்கள் மோசடி பற்றி வாதிடுவதில்லை.
நான் ட்ரம்ப்பின் ஆதரவாளராக இருந்தேன், நான் அவருக்கு இரண்டு முறை வாக்களித்தேன். ஆனால் தேர்தல்கள் கொடுக்கும் முடிவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சூழலில், இங்கு எதுவும் நடக்காதது போல் நாங்கள் தொடர்ந்து செயல்பட முடியாது" எனத் தெரிவித்துள்ளார். இவரைத்தவிர குடியரசுக்கட்சியின் பல முக்கிய தலைவர்களும் ட்ரம்ப்பின் நிலைப்பாட்டிற்கு எதிராகக் குரலெழுப்பத் தொடங்கியுள்ளதால், ட்ரம்ப் தனது முடிவை விரைவில் அறிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.