வேலூர் மாவட்டத்தில், வேலூர் மாநகரப் பகுதி, குடியாத்தம், ஒடுக்கத்தூர் என மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான மகளிர் சுய உதவிக்குழுக்கள் இயங்கி வருகின்றன. இதனைத் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணையத்தின் கீழ்வரும், மாவட்ட மகளிர் மேம்பாட்டு ஆணையம் இயக்கிவருகிறது.
இந்நிலையில், வேலூர் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வேலூர் மாநகரம், ஓடுக்கத்தூர், குடியாத்தம் நகரங்களில் இயங்கும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் சில மரப்பொம்மைகள், சேலைகள், லுங்கிகள் போன்றவற்றை தயாரித்து சந்தையில் விற்பனை செய்கின்றன. இதனைத் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகளை இதுவரை நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செய்துவந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் முதல்முறையாக பெண்கள் சுய உதவிக்குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை, சர்வதேச அளவில் சந்தைப்படுத்தும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக வேலூர் மகளிர் திட்ட அதிகாரிகள் முயற்சிசெய்து வந்தனர்.
சர்வதேச அளவில் பிரபலமான பொருட்களை விற்கும் புரோக்கிங் ஃபேஸ் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் இணையதளத்தில், வேலூர் மாவட்டத்தில் தயாரிக்கப்படும் பொம்மைகள், மரப்பொம்மைகள், பட்டுப் புடவைகள், லுங்கிகள் போன்றவற்றை விற்பனை செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது வேலூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலகம்.
இதுக்குறித்து, வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வேலூர் மாநகரில் இயங்கும் 'எல்லோரோஸ்' என்கிற மகளிர் குழு தயாரிக்கும் மரப்பொம்மைகள் முதல் முறையாக ஃப்ளிப்கார்ட் என்கிற இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற, முக்கியக் கைவினைப் பொருட்கள் இணையத்தின் மூலம் விற்பனை செய்யப்படும். பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புக்கு தகுந்தார்போல், பெண்கள் குழு உருவாக்கும் தயாரிப்புகளின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது, இதன் மூலம் பெண்களின் பொருளாதார மேம்பாடு உயரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.