இந்திய விமானப்படை வீரர் அபிநந்தன் பாகிஸ்தானில் பிடிபட்டபோது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து அந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சர்தார் அர்யாஸ் சித்திக் நினைவுகூர்ந்துள்ளார்.
பாகிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அபிநந்தன் பாகிஸ்தானுக்குள் நுழைந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ள சர்தார் அர்யாஸ் சித்திக், "எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. இந்திய விங் கமாண்டர் அபிநந்தனைப் பாகிஸ்தான் ராணுவம் கைது செய்து வைத்திருந்தது. அவரை விடுவிக்க இந்திய அரசு வலியுறுத்தி வந்தது. அதுகுறித்து முடிவு எடுக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் இம்ரான்கான் கலந்து கொள்ளவில்லை. நான் பங்கேற்றேன். என்னுடன் சேர்ந்து பல்வேறு அமைச்சர்கள், ராணுவத் தளபதி குவாமர் ஜாவித் பஜ்வா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அந்தக் கூட்டத்தில் பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது குரேஷி, “பாகிஸ்தான் ராணுவம் கைது செய்துள்ள இந்திய வீரர் அபிநந்தனை நாம் விடுவிக்காவிட்டால், இந்தியா நிச்சயம் பாகிஸ்தான் மீது போர் தொடுக்கும். அதுவும் இன்று இரவு 9 மணிக்கே இந்தியா போர் தொடுக்கலாம். எனவே அபிநந்தனை விடுவிப்பதுதான் சிறந்தது” என்றார். இதைக் கேட்டுக் கொண்டிருந்த ராணுவத் தளபதி ஜாவித் பஜ்வாவின் கால்கள் பயத்தால் நடுங்கின, முகமெல்லாம் வியர்த்துக் கொட்டியது" எனத் தெரிவித்தார். பாகிஸ்தான் எதிர்க்கட்சித் தலைவரின் இந்தப் பேச்சு தற்போது இந்தியாவில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.