உலகம் முழுவதும் பாலியல் மற்றும் உணர்வுகள் ரீதியிலான பல்வேறு ஒடுக்குதல்களுக்கு ஆளாபவர்கள் திருநங்கைகள். அவர்களது வாழ்வும், பொருளாதார சூழலும் இன்றளவிலும் மேம்படுவதற்கான சாத்தியக்கூறுகள் என்பது மிகக்குறைவாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தனியார் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் திருநங்கை ஒருவர் செய்தி தொகுப்பாளராக பணியமர்த்தப்பட்டுள்ளார். கோஹிநூர் நியூஸ் என்ற அந்த செய்தி நிறுவனத்தில் நேற்றுமுதல் செய்தி தொகுப்பாளராக தன் பணியைத் தொடங்கியுள்ளார் மாவியா மாலிக் எனும் திருநங்கை. இந்தச் செய்தியை ஷிராஜ் ஹாசன் என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தின் மூலம் முதன்முதலாக வெளியிட்டார். இந்த செய்தி பலரிடத்திலும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
#Pakistan first transgender news caster on screen now - Maavia Malik pic.twitter.com/uXJipyrEfL
— Shiraz Hassan (@ShirazHassan) March 23, 2018
கடந்த மாதம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் திருநங்கைகள் பாதுகாப்புக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. அதில், திருநங்கைகளுக்கு எதிரான குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் பல பிரிவுகள் வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.