ஏமன் நாட்டில் அடுத்த இரண்டு மாதங்களில், 461 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிலான நிதி சுகாதார மற்றும் குழந்தைகள் நலனுக்கு ஒதுக்கப்படவில்லை எனில் அந்நாட்டில் லட்சக்கணக்கான குழந்தைகள் சரியான உணவு இல்லாத நிலைக்குத் தள்ளப்படுவார்கள் என யுனிசெஃப் எச்சரித்துள்ளது.
ஒருபுறம் போர், மற்றொரு புறம் கரோனா என இரண்டுக்கும் மத்தியில் லட்சக்கணக்கான மக்கள் ஏமனில் சிக்கித்தவித்து வருகின்றனர். இந்நிலையில், ஏமனில் நிலவும் தற்போதைய சூழல் குறித்து யுனிசெஃப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "போர் மற்றும் கரோனா பரவலால் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில், அடுத்த ஆறு மாதங்களில் கூடுதலாக 30,000 குழந்தைகள் உயிருக்கு ஆபத்தான கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மேலும் ஐந்து வயதிற்குட்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை மொத்தம் 24 லட்சமாக உயரக்கூடும். இது நாட்டின் ஐந்து வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்டப் பாதி.
இதுமட்டுமல்லாமல் ஐந்து வயதிற்குட்பட்ட 6,600 குழந்தைகள் இந்த ஆண்டின் இறுதிக்குள் நோய்களால் இறக்கக்கூடும். நீர் மற்றும் சுகாதாரத்திற்கான மோசமான அணுகல் கரோனா பரவலை அதிகரித்து வருகிறது. சுமார் 95 லட்சம் குழந்தைகளுக்குப் பாதுகாப்பான நீர், சுகாதாரம் போன்றவை கிடைக்கவில்லை. மேலும், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளதால் 78 லட்சம் குழந்தைகளின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், பொதுச்சுகாதாரத்திற்கு 461 மில்லியன் அமெரிக்க டாலர்களும், கரோனா தொடர்பான சுகாதார பணிகளுக்கு 53 மில்லியன் அமெரிக்க டாலர்களும் நிதி ஒதுக்கினால் மட்டுமே இந்த நிலையை மாற்றியமைக்க முடியும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.