பெண் கல்விக்காகப் போராடிவரும் பாகிஸ்தானை சேர்ந்த மலாலா (22), ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்துள்ளார்.
சிறுவயது முதல் பாகிஸ்தான் மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பெண் கல்விக்காக பல்வேறு போராட்டங்களை ஏற்றுக்கொண்டு வரும் மலாலா, 2014-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர் ஆவார். கடந்த 2012 ஆம் ஆண்டு 15 வயது சிறுமியாக இருந்தபோது, தீவிரவாதிகளால் சுடப்பட்டு, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்த மலாலா உலகம் முழுதும் பிரபலமானார். அவரது சேவைகளைப் பாராட்டி உலகம் முழுதும் பல்வேறு அமைப்புகள் அவரை கௌரவித்து வருகின்றன. இந்நிலையில் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதார பிரிவில் பட்டப்படிப்பை மேற்கொண்டு வந்த மலாலா, தனது படிப்பை முடித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள மலாலா, "ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பட்டப்படிப்பை முடித்துள்ளேன். நான் எந்த அளவு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை. இதனை தொடர்ந்து என்னவென்று எனக்கு தெரியாது. இப்போதைக்கு வாசிப்பு மற்றும் தூக்கம்தான்" எனத் தெரிவித்துள்ளார்.