Skip to main content

தமிழக பா.ஜ.க. மாநில தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு!

Published on 11/04/2025 | Edited on 11/04/2025

 

TN BJP Nayinar Nagendran unanimously elected as state president

அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவைச் சந்தித்திருந்தார். அதனைத் தொடர்ந்து தமிழக பா.ஜ.க. தலைவர் மாற்றப்படுவதாக கூறப்பட்டது.  அதே சமயம் தமிழக பா.ஜ.க.வின் அடுத்த தலைவருக்கான பட்டியலில் தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், பா.ஜ.க. சட்டமன்ற குழுத் தலைவரும், அக்கட்சியின் மாநில துணைத்தலைவரான நயினார் நாகேந்திரன் ஆகியோர் உள்ளதாகக் கூறப்பட்டது.

இத்தகைய சூழலில் தான் மத்திய உள்துறை அமைச்சர் 2 நாள் பயணமாக நேற்று (10.04.2025) இரவு 10.20 மணியளவில் சென்னை வருகை தந்தார். கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் தங்கியுள்ள அமித்ஷா இன்று காலை 35க்கும் மேற்பட்ட பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். கூட்டணிக் கட்சித் தலைவர்களுடனும் அமித்ஷா ஆலோசனை செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே தமிழக பா.ஜ.க. சார்பில் மாநில தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கான விருப்பமனு தாக்கல் செய்யலாம் என அறிவிப்பு வெளியானது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில துணைத் தலைவரும், மாநில தேர்தல் அதிகாரியுமான சக்ரவர்த்தி வெளியிட்டிருந்த அறிவிப்பில், “மாநிலத் தலைவர் மற்றும் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள் தேர்தலுக்கான விருப்ப மனுக்கள் வரவேற்கப்படுகிறது.

இந்த தேர்தலுக்கான விருப்பமனுக்களை கட்சியின் இணையதளமான www.bjptn.com என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வெள்ளிக்கிழமை  (11.04.2025) மதியம் 02.00 மணி முதல் மாலை 4 மணி வரை போட்டியிட விருப்பமுள்ளவர்கள் விருப்பமனுவை மாநிலத் தலைமை அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் படிவம் எப்-ஐ (F) பூர்த்தி செய்ய வேண்டும். மூன்று பருவம் தீவிர உறுப்பினராகவும் மற்றும் குறைந்தது பத்து வருடங்கள் அடிப்படை உறுப்பினராகவும் உள்ளவர் மாநில தலைவர் பதவிக்கு போட்டியிட தகுதி பெறுவார். இவரை கட்சியில் தேர்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் 10 பேர் அவரிடம் இருந்து எழுத்து பூர்வமான ஒப்புதல் பெற்று பரிந்துரைக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  தமிழக பாஜக மாநில  தலைவராக நயினார் நாகேந்திரன் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் தமிழக பாஜகவின் 13வது தலைவராக நயினார் நாகேர்ந்திரன் தேர்வு செய்யப்பட உள்ளார். நயினார் நாகேர்ந்திரனை எதிர்த்து யாரும்  போட்டியிடததால் ஒரு மனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முன்னதாக சக்ரவர்த்தி, ‘மாநிலத் தலைவர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் 10 ஆண்டுகள் கட்சியின் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏறகனவே ஆந்திரபிரதேசம், சிக்கிம் போன்ற 5 மாநிலங்களில் விதிகள் மாற்றப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்