கொரியா தமிழ்ச்சங்கம் நடத்திய தமிழ் கலை இலக்கிய விழாவுக்கு வந்திருந்த கடல் மற்றும் மொழியியல் ஆராய்ச்சியாளர் ஒரிசா பாலு வரலாற்றுக் காலம் தொட்டு இந்தியா கொரியா கடல்வழித் தொடர்புகளையும், கொரியா தமிழக பழக்க வழக்கங்களில் உள்ள ஒற்றுமைகளையும் கொரியா தூதரக அதிகாரியிடம் விளக்கிக் கூறினார்.
கொரியாவின் புசான், தேகு மற்றும் கீமே உள்ளிட்ட வரலாற்று சிறப்புமிக்க இடங்களுக்கு பயணம் மேற்கொண்ட அவர் கொரியா தலைநகர் சியோலில் உள்ள இந்திய தூதரகத்தில் முதல் நிலை செயலரும் கான்சுளருமான செரிங் அங்குக்கை சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இந்திய மற்றும் கொரியா நாடுகளுக்கிடையே வரலாற்று ரீதியாக இருந்த கடல் வழித்தொடர்புகளை பற்றி உரையாடினார். குறிப்பாக கடல் நீரோட்டத்தின் வழியே நிகழும் ஆமை வழித்தடத்தின் இன்றியமையாமை குறித்தும், கொரியாவின் ஜேஜூ தீவு மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரத்தில் மேற்கொள்ளப்படும் முத்துக்குளிப்பின் ஒற்றுமை குறித்தும் பேசினார்.
இதனை ஆர்வத்துடன் கேட்டறிந்த கான்சுலார் இந்த வரலாற்றுத் தொடர்பை மேலும் உறுதி செய்வதன் மூலம் இந்திய-கொரியா இருநாட்டு கலாச்சார உறவை மேலும் உயர்த்த முடியம் என்றார். அவரிடம் தமிழ் மற்றும் கொரியா மக்களுக்கிடையேயான உணவு, வாழ்வியல் மற்றும் வழிபாட்டு பழக்கங்களின் ஒற்றுமை குறித்தும் பாலு விளக்கம் அளித்தார்.
1800-ம் ஆண்டு காலத்தில் பாண்டிச்சேரியிலிருந்து சென்ற பிரென்ச் பாதிரியார்களும், 1905-ல் கொரியா வரலாற்றின் தந்தை என்றழைக்கப்படும் கில்பர்ட் என்பவரும் தமிழ்-கொரிய வரலாற்று தொடர்பை தெளிவாக பதிவு செய்திருப்பதையும், தன்னுடைய ஆராய்ச்சியின்போது கிடைத்த வரலாற்று சான்றுகளையும் அவர் மேற்கோள் காட்டினார்.
இந்த சந்திப்பின்போது தூதரகத்தின் கல்வி, பண்பாடு, மற்றும் தொழில்துறை செயலரான சோஸ் ஆண்ட்ரோ கெல்த்தா உடனிருந்தார். இந்தச் சந்திப்பை கொரிய தமிழ்ச்சங்த்தின் சார்பில் அதன் தலைவர் முனைவர் சுப்ரமணியன் இராமசுந்தரம் ஏற்பாடு செய்திருந்தார்.