வங்காள தேசத்தைச் சேர்ந்தவர் டாக்டர் முகமது யூனுஸ் (83). பொருளாதார நிபுணரான இவர், ‘ஏழைகளுக்கான வங்கியாளர்’ என்று அழைக்கப்படுகிறார். மேலும், இவர் ‘கிராமின் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற வங்கியைத் தொடங்கி லட்சக்கணக்கான கிராமப்புற தொழில் முனைவோருக்கு கடன்களை வழங்கியுள்ளார். வறுமை ஒழிப்பை தனது குறிக்கோளாகக் கொண்டு கிராமின் வங்கி மூலம் வறுமை ஒழிப்பு பிரச்சாரத்தில் மேற்கொண்டமைக்காக இவர் 2006 ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசுப் பெற்றார்.
இந்த நிலையில், இவர் கிராமின் வங்கியில் தொழிலாளர் சட்டத்தினை மீறியதாகவும், தொழிலாளர் நல நிதிகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அங்கு நடந்த விசாரணையில், தொழிலாளர் சட்டத்தை மீறியதாக முகமது யூனுஸ் மற்றும் 3 நிர்வாகிகள் மீது குற்றம்சாட்டப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நேற்று (01-01-24) தீர்ப்பளித்துள்ளது.
அப்போது, முகமது யூனுஸ் உள்ளிட்ட 4 பேருக்கு தலா 6 மாதங்கள் சிறைத் தண்டனையும், 25,000 டாகா (வங்காளதேச கரன்சி) அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை பெற்ற 4 பேரும் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர். மனுவை உடனடியாக விசாரித்த நீதிமன்றம், ஒரு மாதம் ஜாமீன் வழங்கியுள்ளது.