சிறு கட்சிகளின் உதவியுடன் இக்கட்டான சூழ்நிலையில் பிரதமராக பதவியேற்ற இம்ரான்கான் அதே இக்கட்டான சூழ்நிலையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மூலம் பதவியிலிருந்து இறக்க வைக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் வரலாற்றில் முதன்முறையாக நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் அடிப்படையில் கலைக்கப்பட்ட ஆட்சி என்ற பெயரை அவருக்கு பெற்றுக் கொடுத்துள்ளது தற்போதைய சூழ்நிலை.
எம்.கியூ.எம் கட்சியின் ஆதரவு விலக்கப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை இழந்த இம்ரான்கான் ஆட்சி அதிகாரப் பூர்வமாக கலைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் குடியரசுத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை இம்ரான்கான் இன்று அனுப்புவார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதன் சமிக்கையாக பாகிஸ்தான் பிரதமருக்கு வழங்கப்படும் அதிகாரப்பூர்வமான அரசு இல்லத்திலிருந்து இம்ரான்கான் வெளியேறியுள்ளார். தற்பொழுது சொந்த வீட்டில் தங்கி இருக்கும் அவருக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இம்ரான் கான் ஆட்சி முடிவுக்கு வந்த நிலையில் பாகிஸ்தானின் அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி மேலோங்கியுள்ளது. இந்நிலையில் பாகிஸ்தானில் எதிர்க்கட்சித் தலைவரும் 'பாகிஸ்தான் முஸ்லிம் லீக் நவாஸ்' கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக பாகிஸ்தான் நாடாளுமன்றம் நாளை பிற்பகலில் கூட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.